நவம்பர் மாதத்தில் இரண்டு சனி மஹா பிரதோஷம்


சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.


ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.


கார்த்திகை மாதம் தமிழர்களிடத்தே மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். கார்த்திகையில் திங்கள்கிழமை சோமவார விரதமாக சிவாலயங்களில் கொண்டாடப்படும். இந்தமாத பவுர்ணமியில் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமைகள் துர்க்கை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரும் சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்று வழங்குவது மிகவும் சிறப்பாகும்.


ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.
அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு பிரதான சனி மஹா பிரதோஷம் வர உள்ளது.


அதாவது நவம்பர் 12 ஆம் தேதி (ஐப்பசி 27) துலாமாதத்தில் சுக்லபட்சத்தில் ரேவதி நட்சத்திமத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம்.
அதேபோல நவம்பர் 26 ஆம் தேதி (கார்த்திகை 11) விருகஷிக மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் சித்திரை / ஸ்வாதி நட்சத்திரத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம் ஆகும்.


பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சன்னதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களை வணங்கிய பலன் கொடுக்கும். அதுவும் சனி மஹாப்பிரதோஷங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது 140 பிரதோஷத்திற்கு சென்று வழிபட்டதற்கு சமம்.

தென்நாடுடைய சிவனே போற்றி,

எந்நாடவர்க்கும் இறைவா போற்றி. .... போற்றி

ஓம் நமசிவாய!



Leave a Comment