அருணாசலேஸ்வரர் ராஜகோபுர சீரமைப்பு பணி நிறைவு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்களை லண்டன் வல்லுநர் குழுவினர் சீரமைத்து முடித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, கோயில் ராஜகோபுரத்தில் சுமார் 10 டன் எடை கொண்ட பாறையை தாங்கிப் பிடிக்கும் கருங்கல்லில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
பின்னர், அறநிலையத் துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி, லண்டனைச் சேர்ந்த சின்டெக் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்திடம் ராஜகோபுர விரிசலை சீரமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
மொத்தம் 6 இடங்களில் ஏற்பட்டிருந்த விரிசல்களை துருப்பிடிக்காத இரும்புக் கம்பிகள், எஃகு ஆகியவற்றை பயன்படுத்தி தைக்கும் பணியில் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர்.
நிபுணர் குழுவினர் தொடர் முயற்சியால், ராஜகோபுரத்தின் உத்திரக்கல்லில் ஏற்பட்டிருந்த விரிசலும், கோபுரத்தின் வலது மற்றும் இடதுபுறத்தில் ஏற்பட்டிருந்த மேலும் 5 சிறிய அளவிலான விரிசல்களும் சீரமைத்து முடிக்கப்பட்டன.



Leave a Comment