ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு....


மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறதுஓணம் பண்டிகை. சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு கேரளாவில் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு:
புராண காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டான். சிவபெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும் என்று சுக்ராச்சாரியார் கூறினார். யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மகாபலி மேற்கொண்டான்.
இந்நிலையில், மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர்.
இதைக் கேட்டதும், மகாபலி இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டால், அசுர குலத்தை சேர்ந்த மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்து விடும். அதனால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே, பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார். அவர்களின் மனக்குமுறல்களை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே, மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார்.

யாகசாலையின் வாசலில் மகாபலியிடம் ஏராளமானவர்கள் தானம் பெற்று கொண்டிருந்தனர். மூன்று அடி உயர வாமனர், ஒரு கையில் ஓலை குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தையும் ஏந்தியபடி வரிசையில் நின்றார். அவரது முறை வருவதற்கு முன்பே தானம் நிறைவுற்றது. யாகசாலை வாசலில் குடை பிடித்தபடி அந்தணர் உருவில் நின்ற வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந்தான். ‘நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டான். வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மகாபலி, வாமனரின் கையில் இருந்த கமண்டல நீரை எடுத்து தானம் அளிக்க முன்வந்தான்.
அப்போது, சுக்ராச்சாரியார் அவனை தடுத்து, ‘வந்திருப்பது மகாவிஷ்ணுவாக இருக்கும், எதையும் யோசித்து செய்’ என்று எச்சரித்தார். ஆனால், மகாபலி, ‘என் தானத்தின் அருமை அறிந்து மகாவிஷ்ணுவே தானம் பெற வந்திருக்கிறார். அவருக்கு தானம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றான். உடனே, சுக்ராச்சாரியார் கருவண்டாக உருமாறி, கமண்டல நீரின் வழியை அடைத்தார். வாமனர், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்தினார். பின்பு, வாமனரிடம் இருந்து கமண்டல நீரை எடுத்து, நிலத்தில் விட்டு மகாபலி தானமாக வழங்குவதாக கூறினான். உடனே, வாமனர் விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந் தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே’ என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார்.
பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம், ‘கடவுளே, நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்’ என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.



Leave a Comment