மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகல துவக்கம்


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா கொடியற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இத்கோயிலில் சுவாமிக்கான முக்கியத் திருவிழாக்களில் ஆவணி மூலத் திருவிழா குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி, சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் 8 சிறிய கலசங்களிலும் 2 பெரிய கலசங்களிலும் வைக்கப்பட்ட புனித நீருக்கு வேத மந்திரம் முழங்க பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கொடி மரத்தில் தர்ப்பைப்புல் கட்டப்பட்டு, சுவாமி, அம்மனுக்குரிய ஆடைகள் கொடிமரத்தில் அணிவிக்கப்பட்டு கொடிமரத்தின் பீடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு நிறைவு பூஜைகள் நடைபெற்றன.
செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இரவில் ஆவணி மூல வீதிகளில் சுவாமி சந்திரசேகரராகவும், அம்மனும் எழுந்தருளி அருள்பாலிப்பர். செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் தினமும் இரவில் சுவாமி திருவிளையாடல் திருக்கோலத்தில் அருள்பாலிப்பார். அதன்படி கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்றது, தருமிக்கிப் பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண்சுமந்தது, விறகு விற்றது என தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். செப்டம்பர் 11 ஆம் தேதி பகலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை மதுரை வைகை புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெறும்.



Leave a Comment