கடலுக்கடியில் சிவாலயம்


இயற்கை பல அதிசய விநோதங்களைக் கொண்டது .  பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகில் , இயற்கையை மிஞ்சியவர் , விஞ்சியவர் எவருமில்லை . கடல் தன்னுள் எண்ணற்ற அதிசயங்களை உள்ளடக்கியுள்ளது . அத்தகைய அதிசயங்களில் ஒன்று தான் குஜராத் மாநிலம் ,பாவ் நகரில்   இருந்து 30 கி மீ  தொலைவில் உள்ள கோலியாக் கடற்கரையில் உள்ள நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் . இங்கு  கடலுக்குள் உலகப் புகழ்ப் பெற்ற  நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் உள்ளது . இங்குள்ள சிவனை தரிசிக்க கடல் நீர் விலகி வழிவிடும் அதிசயத்தை காணலாம் .  இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்குள்ள நிஷ்களங்கேஷ்வரரை  பாண்டவர்கள் வழிபட்டதன் அடையாளமாக , இந்த சிவாலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளதை காண முடியும் .

 

இருபது முதல் முப்பதடி உயரம் உள்ள  இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் இதுவரை வீசிய எந்த புயல்களினாலும்  சேதமடையாமல் இன்றளவும் கம்பீரமாக நிற்பது சிறப்பு . தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டமானது  இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.அந்த அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்து காணப்படும் நிலையில் , பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரை திரும்பும் அதிசயத்தை காணலாம் .

குஜராத்தின் பாவ் நகரின் அருகில்  இருந்து 30 கி மீ  தொலைவில் உள்ள கோலியாக் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது .

 



Leave a Comment