பழனி முருகன் கோவிலில் ஊடல் நிகழ்ச்சி


பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் நிறைவு நாளான ஏப்ரல் 12 ஆம் தேதி திருஆவினன்குடி கோவிலில் முத்துக்குமார சுவாமியுடன் தெய்வானை அம்மனின் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி முருகன் சிலை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் என்னும் சித்தரால் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலமாகும். இம்மாதங்களில் நவபாஷான உருவமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் தண்டாயுதபாணி சுவாமி ஆகிய பழனி முருகனை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப்ரல் 3-ம் தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 10-ம் திருநாளான நேற்று காலை 7.20 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானையுடன் சன்னதி வீதி, கிரிவீதிகளில் உலா நிகழ்ச்சிக்காக புறப்பாடு நடைபெற்ற போது, முத்துக்குமார சுவாமியிடம், தெய்வானை அம்மன், வள்ளியை திருமணம் செய்ததால் கோபித்துக்கொண்டு தனியாக பல்லக்கில் எழுந்தருளி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பின்னர் கிரிவலம் வந்து பல்லக்கில் இருந்த தெய்வானை அம்மன் கோபித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்து, கதவுகளை அடைத்து, முத்துக்குமார சுவாமியை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்பின்னர் முருகனின் பொருட்டு தெய்வானை அம்மனுக்கு தூது விடும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து அம்மனுக்கு ஊடல் தீர பாடல் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருஊடல் பாடல்களை சிவ நாகராஜன் பாடினார். பாடலில் வள்ளியும் தெய்வானையும் ஒன்றே என்னும் பொருள் தரும் வகையில் பாடல் அமைந்திருந்தது.



Leave a Comment