பாவங்கள் போக்கும் ஸ்ரீ ராம நாமம்


காக்கும் கடவுளான திருமால் எடுத்த தசாவதாரத்தில் , ஒரு மனிதன் , தான் எடுத்த மானிடப் பிறவியில் எத்தகைய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்ந்துக் காட்டிய அவதாரமே ஸ்ரீ ராம அவதாரம்.

எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்ற தெய்வ வாக்கின் படி, இந்த மண்ணுலகையும், மக்களையும் இலங்கை வேந்தனான ராவணனின் ஆணவப் பிடியில் இருந்து காக்க மகாவிஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரமே ராம அவதாரம் .

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக நம் புராணங்கள் தெரிவிக்கின்றன.அந்த பொன் நாளையே நாம் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகிறோம் . இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராண கதை ஒன்று உண்டு . பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி மன்றாடினர்.

அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்' என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்- தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்- கவுசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது

உலகை ரட்சிக்கும் இறைவனே ஆனாலும் மனிதனாக பிறப்பெடுத்து விட்டால் , மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் அனுபவித்தாக வேண்டும் என்று உணர்த்திய புண்ணிய புருஷர் ஸ்ரீ ராமர் . ரகு குலத்தில் தசரத மகா சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், மிதிலை ஜானகி தேவியை மணந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகபத்தினி விரதத்தை மேற்கொண்டார் . தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு உதாரண புருஷனாய் திகழ்ந்தார் .

ராம நவமி கொண்டாடும் விதம்

ராமர் பிறப்பதற்கு முன்பான ஒன்பது நாட்கள்'கர்ப்போஸ்தவம்' என்ற ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் 'ஜன்மோதீஸவம்' என்ற ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது . இவ் விரதம் இருப்பவர்கள் தொடக்க நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபட்டு , ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும். இப்படி ஒன்பது நாளும் விரதத்தை அனுஷ்டிக்க முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும்.

ராம நவமி தினத்தன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். சிலர் ஸ்ரீராமர் படத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஆதலால் இந்த ஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.



ராம நாமத்தின் மகிமை :

ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன . ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமம் ஜபித்த படி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார் அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்

ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் . ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார். . அதற்கு ஆஞ்சநேயர, “ ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும்” என்றாராம்

அவ்வளவு சக்தி வாய்ந்தது ராமநாமம்.!!

ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம்.
பாவங்களில் இருந்து கரை சேருவோம் .



Leave a Comment