1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழா... ராமானுஜர் கோயில் தேர் சீரமைக்கும் பணி தொடக்கம்


ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழா ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, ராமானுஜர் கோயிலில் உள்ள தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஆதிகேஷவபெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவாதிரைக்கு 9 நாள்களுக்கு முன்பு, சித்திரைப் பெருவிழா அவதார உற்சவமாக நடைபெறும்.
இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி உற்சவம், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 4 நாள்கள் தெப்பத் திருவிழா நடைபெறும். இதில், தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், சித்திரை திருவிழாவில் பெரிய தேரை பயன்படுத்தப்படாமல் சிறிய தேரை கோயில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, தேர் உலா வரும் காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு ஆகிய சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த பெரிய தேரை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
இதில், தேரின் சக்கரங்கள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் விரைவில் நிறைவு பெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Leave a Comment