உலகின் மிகப்பெரிய ஆலயம் - 6


அதுவரை அருவியென்றால் எனக்குள் இருந்த அனுபவத்தையும் கற்பனையையும் புரட்டிப் போட்டுக் கொட்டிக் கவிழ்த்ததுபோல் பாய்ந்து கொண்டிருந்தது அருவி. குற்றலாத்திலும் ஹொகனேக்கலிலும் உயரமான அருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல் அகலமான அருவியைப் பார்த்ததில்லை. உயரமும் அதிகம்தான். வழியில் மடிந்தெல்லாம் இறங்கவில்லை. நேரே கீழே குபீரென வாளியில் இருந்து கவிழ்த்துவிட்டதுபோல் கொட்டிக் கொண்டிருந்தது அருவி. ஏதோ சாகசப் படத்தில் வரும் நிலக்காட்சியை நேரில் பார்க்கும் அனுபவம்.

எங்கள் ஊரில் கொஞ்சம் மழை அடித்துப் பெய்தாலே, மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் அருவிகள் புறப்பட்டுவிடும். நீல மலைகளுக்கு நடுவே வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் அருவிகளைக் காணக் கண்கோடி வேண்டும். எல்லாவற்றுக்கும் பிரதமானமாக இருக்கும் அருவியின் பெயர் பல்லிளிச்சான் கணவாய் அருவி. மற்ற அருவிகளெல்லாம் இரண்டு மூன்று நாளில் காணாமற் போய்விடும். இதுமட்டும் நின்று பொழியும்.

மழையற்ற வறண்ட நாட்களிலும்கூட அந்த அருவியின் தடத்தைத் தெளிவாக எங்கள் பாட்டி வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்க முடியும். என் பால்யத்திலெல்லாம் மழை அடித்துப் பெய்யும் நாட்கள் குறைவு. முணுமுணுவெனப் பெய்து கொண்டே இருக்கும். குற்றாலத்துச் சாரல் எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கும். நல்ல பெருமழை பெய்தால், என் பள்ளிக்கு எதிரிலிருக்கும் சஞ்சீவி மலையிலும் ஓர் அருவி புறப்படும்.

ஒரே ஒரு முறை எங்களையெல்லாம் அப்பா அழைத்துப் போயிருக்கிறார் அந்த அருவிக்கு. அதற்குக் கழுதைக் கடவு அருவி என்று பெயர். சுற்றிலும் பெரிய பெரிய மரங்களெல்லாம் இருக்க மாட்டா. சப்பாத்திக் கள்ளியும் குட்டை முள் மரங்களும்தான் இருக்கும். சீனிக் கல் மலைதான் சுற்றியிருக்கும். ஆனால் அதற்குள் ஓடிவந்து விழும் அந்தக் குட்டி அருவி. அதில் குளிப்பது ஒரு சுகம்.

கூட்டம் அதிகம் இருக்காது. பெண்கள் கிட்டத்தட்ட அறவே இருக்க மாட்டார்கள். பெரிய அருவிகளில் குளிக்கப் பெருங்கூட்டம் கூடிவிடும். குற்றாலத்தில் வரிசையில் நின்று குளிக்க எனக்குப் பிடிக்காது. அது எவ்வளவு பெரிய ஒசத்தியான அருவியாக இருந்தாலும் போனோமா குளிச்சோமா வந்தோமா என்று இருக்கணும். இந்த வரிசையில் நிண்ணு குளிக்கறதெல்லாம் நமக்கு ஒத்துவராது சாமியோவ் !

நல்லவேளை கம்போடிய அருவியில் கூட்டம் அதிகமில்லை. சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது, நாம் வசிக்கும் தெரு வரையிலும் நடந்து வருவோம். வீடு கண்ணுக்குத் தென்பட்டதும் தெருவுக்குள் ஓடத் தொடங்குவோம். அதுமாதிரி, அருவியைப் பார்த்ததும் எங்களுடைய நடையின் வேகம் கூடியது. ஓட்டமும் நடையுமாய் அருவிக்கு அருகில் செல்லும்போது எங்கள் பேச்சொலியை அருவி அடக்கிவிட்டது. கூச்சல் போட்டுக் கத்தினால்தான் எதிராளிக்குக் கேட்கும். அப்படியொரு பேரோசையில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

 

கரையில் துண்டு, கேமரா போன்றவற்றை ஓட்டுநர் ராவிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே இறங்கினோம். அம்மாடியோவ்! அப்படியொரு குளிர்ச்சி அருவித் தண்ணீர். உடலே ஒரு கணம் நடுங்கி ஓய்ந்தது. நடந்து வந்ததில் உடம்பு வியர்த்துப் போயிருந்தது. அதில் குளிர்நீர் பட்டதும் முதலில் சுரீர் என்று இருந்தாலும் அதன் பிறகு அருவித் தண்ணீரை விட்டு வெளியே வரவே மனமில்லை. ஈராயிரமாம் ஆண்டில் ஹரித்வார் போனபோதும் அப்படித்தான் இருந்தது.

அதிகாலையில் கங்கையில் குளிக்க வேண்டுமென்று அம்மா, அப்பா, சித்திகளோடு 5 மணிக்கு கங்கைக் கரையை அடைந்து விட்டோம். நாங்கள் தங்கியிருந்த சத்திரத்துக்கு மிக அருகில்தான் கங்கை ஓடிக் கொண்டிருந்தாள். எழுந்திருக்கும்போதே கடுங்குளிர். பல்லெல்லாம் கிட்டித்துப் போய்விடும்போலிருந்தது. ஒருவழியாக எழுந்து நடந்து கங்கைக் கரையை அடைந்தால் கூட்டம் ஜே ஜே என்றிருந்தது அந்த அதிகாலை வேளையில்.

கங்கை நல்ல வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கரையிலிருந்து படிக்கட்டு இறங்கிச் சென்றது. சற்றுத் தொலைவில் ஆட்களை நதி அடித்துக் கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காக கம்பிக் குழாய்களை நீளமாகப் பொருத்தி இருந்தார்கள். கால் நதியில் பட்டதுமே குளிர் எலும்பை ஊடுருவியது. எங்களோடு அந்தத் தீர்த்தயாத்திரையில் வந்திருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் முதியவர்கள். அத்தனை பேரும் கங்கையைத் தொட்டதும் ஒவ்வொரு விதமாகக் கூச்சல் போட்டனர்.

பாதம் பட்டதற்கே இப்படிக் குளிருதுண்ணா உள்ள முங்கினா உயிரே போயிரும்போல இருக்கேடா என்றார் என் சித்தி. பரவாயில்லை. உள்ளே இறங்கினா குளிர்விட்டுப் போயிடும் வாங்க சித்தி என்று மெதுவாக அவரை இழுத்துக் கொண்டு இறங்கி ஒரே முங்கு ! அவ்வளவுதான். அதை வார்த்தையில் வருணிப்பது கடினம். செத்தேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. சில விநாடிகளுக்குள் உடம்பு அந்தக் குளிரை ஏற்றுக் கொண்டு நதியை அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.

என் அப்பா எந்தக் கூச்சலும் போடாமல் சிவனே என்று முங்கி முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார். அங்க பாரு ஒரு ஆளை.. ஏதாவது ரியாக்‌ஷன் காட்டுதான்னு! என்று கேலி செய்து கொண்டே என் அம்மாவும் கங்கா ஸ்நானத்தை ரசித்தார்.

அதே தண்மை அதே குளிர் கம்போடிய அருவித் தண்ணீரிலும். காலால் தடவித் தடவி உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினோம். இடுப்பளவுக்கு மேல் ஆழம் வந்ததும் குபுக்கென்று முங்கினோம். ஆஹா.. ஆஹா. ஆஹஹஹா.. என்னே ஒரு சுகம். சிறுவயதிலிருந்து எல்லாவிதக் குளியலும் எனக்கு வாய்த்திருக்கிறது. கிணற்றுக் குளியல், குழாய்க் குளியல், ஆற்றுக் குளியல், ஏரிக் குளியல், தொட்டிக் குளியல், வாளியில் இருந்து மொண்டு குளிக்கும் சிக்கனக் குளியல் என்று ஒவ்வொன்றும் ஒருரகம்.

அவற்றுள் இது ஆகச் சிறந்தது. தண்ணீருக்குள் முங்கியதும் அருவித் தண்ணீருக்கே உரிய வாசனையை என்னால் உணர முடிந்தது. அது உயிர்வாயு அதிகம் கலப்பதால் அருவித் தண்ணீருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய வாசம் என்று நினைக்கிறேன். கடல், ஆறு தவிர மற்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேமே என்று அசையாமல் கிடக்கும். ஆனால், அருவித் தண்ணீர் ஓடும், அலையும், உருளும், குபீரெனக் குதிக்கும், கும்மாளமிட்டுத் ததும்பும், பாறைகளை அறையும், குத்திக் குடையும், மூலிகைகளை அலசும். அப்போது அதில் ஏராளமான உயிர்வாயு கலப்பதாகக் கூறுவார்கள்.

அதனால்தான் வேறெந்தத் தண்ணீருக்கும் இல்லாத ருசி அருவித் தண்ணீரில் இருக்கும். அதற்கெனப் பிரத்யேகமான ஒரு வாசனையும் இருக்கும். அதை அறிந்தவர்கள் இப்போது இதைப் படிக்கும்போதுகூடக் கண்டிப்பாக அதை உணர முடியும்.

தப்பித் தவறித் தண்ணீருக்குள் மூழ்கிக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டால் புரையேறித் தண்ணீரை வெளித்தள்ளும்போதும் இலேசாக அந்த வாசனை வரும். அருவி நீருக்குள் விழுந்த கணத்திலிருந்து ஒவ்வொருவரும் சிறுபிள்ளைகளாக மாறிப் போனோம். அடடா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா ! இறைவா ! இறைவா ! என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது.

மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் இருக்கும்போது நம்முடைய உடல்மொழி முற்றிலுமாக மாறிவிடுவதை அன்று உணர்ந்தேன். ராஜூ விதவிதமான யோக நிலைகளில் நடனமாடினார். பாறை பாறையாகத் தாவி ரா-வுக்கு பலவிதமாகப் போஸ் கொடுத்தார். சூரிய நமஸ்காரம் செய்வதுபோல ஒற்றைக் காலைத் தூக்கி உச்சியைப் பார்த்தார்.

நவீன் கொஞ்சம் இறுக்கமான ஆள். அவருடைய முகமும் அருவிக்குள் சிரித்துக் கொண்டே இருந்தது. மகாதேவனோ உடல் முழுவதும் மகிழ்ச்சியை வாரிச் சூடியிருந்தார். பரணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏண்ணா என்னண்ணா இது இப்படி இருக்கு இந்த இடம் ? நாம இருக்கிறது நெசமாவே பூமிதானா இல்ல வேறே ஏதாவது லோகத்துக்கு வந்துட்டோமா ? என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அருவி விழுந்து ஓடும் தடாகத்தில்தான் இன்னமும் நாங்கள் இருந்தோம். சற்றுத் தொலைவில் சடேர் புடேர் எனத் துள்ளி விழுந்து கொண்டிருந்தது அருவி. தடாகத்தில் பெரும்பாலும் பயணிகள்தான். கம்போடிய முகங்கள் சற்றுக் குறைவுதான். ஒரு வெள்ளைக்காரத் தம்பதி கைக்குழந்தையோடு எங்களுக்கு அருகே நீரில் இறங்கியிருந்தது. அந்தக் குழந்தை தளக் புளக் என்று தண்ணீரைத் தப்பளம் கொட்டி மகிழ்ந்து கொண்டிருந்தது பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி.

மிதமிஞ்சிய கூட்டம் இல்லை. அளவான கூட்டம்தான். மெல்ல மெல்ல நானும் ராஜூவும் அருவி விழும் இடத்துக்கு நேர்கீழே செல்லத் தொடங்கினோம். நடுவே பெரிய பள்ளமிருந்தது. கால்களால் துழாவிப் பார்த்தேன். தரை தட்டுப்படவில்லை. ஒரு ஆள் ஆழத்துக்கும் கூடுதலாக இருக்க வேண்டும். மெதுவாக நீந்தி அகலமான அருவியின் நடுப்பகுதிக்கு முன்னேறினோம். ஏற்கனவே அங்கே இளந்தாரிகள் பலர் நின்று அருவியைத் தலையில் தாங்கிக் கொண்டிருந்தனர்.

அருவிக்கு அருகிலுள்ள எல்லாப் பாறைகளுமே வழுக்கின. எதையும் பற்றி மேலே ஏற முடியவில்லை. ஓரிடத்தில் உறுதியான திண்ணை மாதிரிப் பாறை கிடந்தது. அதில் ஏற அங்கிருந்தவர்கள் கைபற்றித் தூக்கி உதவினர். அவ்வளவுதான். இது வேறு உலகம். கண்ணெதிரே விழும் அருவிக்கும் பின்னாலுள்ள ஈரப் பாறைக்கும் நடுவே நாங்கள். ஓவென ஓசையிட்டுப் பொங்கும் அருவிக்குப் பின்னால் அந்தத் தண்ணீர்த் திரையைப் பார்த்தபடி பாறையோரத்தில் ஒண்டியவாறு நின்று ரசித்தோம்.

தைரியம் வரும்போது தலையை முன்னால் நீட்டினால் அருவி மடேர் மடேர் என்று தலையில் அறைந்தது. ஏழெட்டுப் பேர்தான் அந்த இடத்திலிருந்தோம். நீச்சல் தெரியாவிட்டால் அந்தப் பகுதிக்கு வர முடியாது. அந்த இடத்திலிருந்து மேல்நோக்கி அருவியைப் பார்க்க விரும்பினேன். ஆனால் கண்களில் தண்ணீர் விழுந்து கண்ணை மறைத்தது. தண்ணீர் நல்ல உயரத்திலிருந்து விழுவதால் எழும் துமி சுற்றியிருந்த இடத்தைப் புகைபோல் மூடியிருந்தது.

வானம் தெளிவாக இருந்தபோதும்கூட மழை வரப் போவதுபோன்ற ஒரு மயங்கிய வெளிச்சம். அருவிக்குள் நிற்கும்போது சூரிய வெளிச்சம் உறைக்கவில்லை. நல்ல உணக்கையாக இருந்தது.

சுற்றிவர மழைக்காடுகளுக்கே உரிய பசுமை. தமிழர்களுக்கு அறிமுகமில்லாத மரங்கள். விதவிதமான இலைகள், கொடிகள். அந்தப் பின்னணியோடு அருவி மேலும் அழகாகத் தெரிந்தது. அருவிக்கு நடந்து வரும் வழியிலேயே ஒரு குட்டி அருவியைப் பார்த்தோம். அதுவும் நல்ல அகலமான அருவிதான். அங்குதான் கூட்டம் அதிகமிருந்தது. ஆனால், உயரம் இரண்டு ஆள் அளவுகூட இல்லை. பெண்களும் சிறுவர்களுமே அங்கு அதிகமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் பேரருவியில் இருந்து வெளியே வர எங்களுக்கு மனமே இல்லை. இப்படியே இந்த நாள் உறைந்துவிடாதா என்றுதான் எல்லாருமே ஏங்கினோம். நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அணுஅணுவாக அருவியை அனுபவித்தோம். ஒருவழியாக மீண்டும் நீந்தி தடாகத்தின் முன்பகுதியை அடைந்து இடுப்பளவுத் தண்ணீரில் நின்று கொண்டு ஒருவர்மீது ஒருவர் தண்ணீரை வாரியிறைத்துப் பிள்ளைகள் போல் விளையாண்டோம். ஆச்சு ஒரு மணி நேரத்துக்கு மேலேயே ஆகியிருக்கும் நாங்கள் உள்ளே இறங்கி.

ஓட்டுநர் ரா கூப்பிடத் தொடங்கினார். எங்களுக்கும் குளித்ததில் வயிறு காலியாகிப் பசி கிள்ளத் தொடங்கியது. சரி போதுமென்று எழுந்து உடம்பைத் துடைத்து மேலே ஏறத் தொடங்கினோம். பரணி அருவியைத் திரும்பிப் பார்த்தார். சில விநாடிகள் நின்றார். “போயிட்டு இன்னோரு நாள் வரேன்டா செல்லம் !” என்றார்.

- பொன். மகாலிங்கம்

 

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment