உலகின் மிகப்பெரிய ஆலயம் - 20


புனோம் பென் தேசிய அரும்பொருளகத்தில், உலோகத் திருமேனிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கிடந்த கோல விஷ்ணுவைக் கடந்து கல் சிற்பப் பகுதிக்கு நகர்ந்தோம். விதவிதமான முகலிங்கங்கள் இருந்தன அங்கே. பேரழகுடைய புத்தர் சிலைகள் நின்ற கோலத்தில் இருந்தன இந்தப் பகுதியில். அப்படி ஒரு வழவழப்பை எப்படித்தான் உருவாக்கினார்களோ அந்தக் கல்லில். சோழர் காலச் சிற்பங்கள் அளவுக்கு வேலைப்பாடு மிக்க சிலைகள் இங்கே இல்லைதான். ஆனாலும் இங்குள்ள சிலைகள் மாறுபட்ட அழகோடு இருந்தன. இங்குள்ள கற்சிலைகளில் முக்கியமானது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டுக் கையுள்ள பெரிய நின்ற கோல விஷ்ணு சிலை. கெமர் சிற்பங்களில் இதுவரை கிடைத்துள்ள சிற்பங்களில் இதுவே ஆகப் பழமையானது என்கிறது குறிப்பு. அதன் பக்கத்திலுள்ள ராமர், பலராமர் சிலைகளும் அற்புதமானவை. அசப்பில், எகிப்திய வாயில் காவலர்கள் போல் தோற்றம் தரும் 2.70 மீட்டர் உயரமுள்ள ஆஜானுபாகுவான சிலை விஷ்ணுவுடையது.

இடுப்பிலிருந்து முழங்கால் வரை காட்டப்பட்டுள்ள ஆடைதான் இந்தச் சிலையின் உன்னதம். வரி வரியாக, மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வலப்பக்கத்தில் வில்லுடன் இராமனின் திருவுரு. இடப்பக்கத்தில் ஏர்க் கலப்பையுடன் இருப்பதால் பலராமராக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். விஷ்ணுவின் எட்டுக் கைகளில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றில் வித்தியாசமான படைக்கலங்களை ஏந்தியிருக்கிறார். வலக் கைகளில் மேலிருந்து கீழாக, அனல், சிறுதடி, உரிக்கப்பட்ட மான்தோல், வளைந்த பெரியதடி ஆகியவை உள்ளன.

இடக் கைகளில், மேலே இரண்டில் இருப்பது தெரியவில்லை. உடைந்துவிட்டன. மற்ற இரண்டில் ஒன்றில் மின்னற்படையும் மூக்குள்ள தண்ணீர்க் குடுவையும் உள்ளன. அமுத கலசமோ ?

இடையின் நடுவே ஆடை முடிச்சிடப்பட்டு தார்பாய்ச்சிக் கட்டப்பட்டுள்ளது. வலப்புறமுள்ள இராமனின் இடக்கை மட்டும் வில்லேந்தியவாறு உள்ளது. இராமனுக்கு வலக்கை இல்லை. பின்னமாகிவிட்டது. இடப்புறமுள்ள பலராமருக்கு இடக்கையில் கலப்பை காணப்படுகிறது. வலக்கை உடைந்து விட்டது. விஷ்ணுவைக் காட்டிலும் இராமனும் பலராமனும் பேரழகோடு திகழ்கின்றனர். இருவருக்கும் ஒரே மாதிரியான அழகு கொஞ்சும் அரையாடை. வழவழப்பான திருமேனிகள் மூன்றும். இராமன், பலராமன் முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இந்தப் பகுதியிலுள்ள இன்னொரு வித்தியாசமான சிற்பம் அன்னத்தின் மேலமர்ந்த வருணனின் சிலை. நான்கு புறமும் தலையைத் தூக்கிய தனித் தனி அன்னங்களுக்கு மேல் ஒரு காலை மடித்து ஒரு காலை உயர்த்தி மரபார்ந்த ஜாவானிய பாணியில் உட்கார்ந்திருக்கிறார் வருணன். நான்கு அன்னங்களும் பத்மபீடத்தின் மேல் நிற்கின்றன. மெல்லிய புன்னகையோடு தென்படும் வருணனின் கைகள் உடைந்துள்ளன. இடக் கையைத் தொடைமேல் வைத்திருக்கிறார். வலக்கையில் ஏதோ வைத்திருக்கிறார். தலைப்பாகை போன்ற அலங்கார மகுடம். பூனைமீசை தெரிகிறது. வடிந்த காதுகள். திறந்த மார்பில் அணிகலன்கள் ஏதுமில்லை. இடையாடை விசிறி போல் மடிப்புகளோடு காட்டப்பட்டுள்ளது. அன்னங்கள் நான்கும் இந்தச் சிலையில் அபாரம். விரிந்த சிறகுகளின் வேலைப்பாடும் அவற்றுக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆரங்களும் சிற்பியின் மேதமைக்கு நல்ல சான்று.

ஏழாம் ஜெயவர்மனின் உருவம் எனக் கருதப்படும் சிலையொன்றும் இந்தப் பகுதியில் உள்ளது. ஆய்வாளர்களுக்கு இடையே அதுகுறித்துக் கருத்து வேறுபாடு நிலவினாலும் பல்வேறு ஆய்வுகள் தரும் குறிப்பின்படி பார்க்கும்போது இது ஜெயவர்மனின் உருவச் சிலையாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறது கையேடு. கைகள் இரண்டும் உடைந்துள்ளன. காலை மடித்து அமர்ந்தகோலம். அரைக் கண் மூடிய தியான நிலை. திறந்த மார்பு. அணிகலன் இல்லை. வடிந்த காதுகள். சாந்தமான முகம்.

காளை மேல் அமர்ந்த சிவனும் உமையும் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளனர். கெமர் எழுத்தில் எழுதப்பட்ட ஒரு பெரிய செப்பேடு போன்ற கல்வெட்டின் நடுவே ரிஷபத்தில் சிவன் மட்டும் அமர்ந்திருக்கிறார். அதன் இரண்டு பக்கங்களிலும் கருடன் மேல் அமர்ந்த விஷ்ணுவும் நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர்.

ஆலய நிலைவாசல்படி மேல் வரும் கிடைக்கல் (Lintel) அலங்கார முகப்புகள் பல இங்கே உள்ளன. எல்லாமே புடைப்புச் சிற்பங்கள். அவற்றுள் முக்கியமானது, பீமனும் துரியோதனனும் சண்டையிடும் காட்சி. பத்தாம் நூற்றாண்டுச் சிற்பமான இது முக்கோண வடிவமான மகர தோரணத்துக்குள் செதுக்கப்பட்டுள்ளது.

மகரங்கள் இரண்டும் ஐந்து தலை நாகங்களை விழுங்குவது போல் உள்ளன. இடப் பக்கத்திலுள்ள துரியோதனன் ஒரு தடியை வைத்திருக்கிறான். அவனுக்குப் பின்னே கிருஷ்ணனும் பலராமனும் ஏர்க் கலப்பையோடு காட்டப்பட்டுள்ளனர். எதிரே ஆகாயத்தில் பறந்தவாறு பீமன். பீமனுக்குக் கீழ் பாண்டவர்களில் நால்வர் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கிருஷ்ணனும் பலராமனும் ஏன் துரியோதனன் பக்கம் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. கம்போடிய மகாபாரதம் மாறுபட்டதோ? இந்தக் காட்சிக்கு மேலே இருவர் பறந்தவாறு சண்டையிடும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுள்ள சிற்பம்.

இதேபோல், கிடைக்கல் அலங்கார வேலைப்பாடு கொண்ட மற்றொரு சிற்பம், மாரனின் தோல்வி. வழக்கமான மகர தோரண அலங்காரம், ஐந்து தலை நாகமுகப்போடு முடிகிறது. அதற்குள் மூன்று நிலைகளில் சிற்பங்கள். ஆக மேலே, அருளல் முத்திரையோடு புத்தர். வழக்கமான பூமி ஸ்பர்ச முத்திரை இங்கில்லை. நடுவில் உள்ள நிலையில், நான்கு பேர் மாரனை வெற்றிகொண்ட போதிசத்துவரை ஆசிர்வதிக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். அதற்குக் கீழே மாரனின் படைகள். முக்கியத் தளபதிகள் இருபக்கத்திலும் யானைமேல் அம்பாரியிலிருந்து பத்துக் கைகளோடு போரிடுகின்றனர். குதிரை வீரர்களும் உள்ளனர். யானைகளுக்கு நடுவே, பூமித் தாய், இளம் ஆடவரின் வடிவில் தலை முடியைத் திருகிக் கொள்வது போல் காட்டப்பட்டுள்ளது. அதற்கும் கீழே செதுக்கி முடிக்கப்படாத பகுதியில், மாரனின் படைகள் சமுத்திரத்திற்குள் மூழ்குவதுபோல் உள்ளது.

இந்த வருணனை எல்லாம் அரும்பொருளகக் கையேட்டில் உள்ளது. பௌத்த மரபும் புராணமும் தெரிந்திருந்தால், கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம் சிற்பங்களை இன்னும் நன்கு ரசிக்கலாம். இந்தச் சிற்பத்தில் மாரனின் படைகள் அணிந்திருக்கும் நகைகள், யானையின் உணர்ச்சி, வீரர்களின் முகபாவம், ஆயுதங்கள் எல்லாமே சிறப்பாக உள்ளன. யானைகளின் சினம், விறைத்த வாலில் காட்டப்பட்டுள்ளது.

கல் சிற்பக் காட்சிக் கூடத்திலிருந்து அடுத்து வடபுறத்திலுள்ள காட்சிக்கூடத்துக்கு வந்தோம். இங்கே கெமர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் அன்றாட வாழ்வியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எல்லாம் சுமார் 200 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட்ட பொருட்கள். வாள், முத்துப் பதித்த வெற்றிலைச் செல்லம், கின்னரி வடிவப் பெட்டி, கத்தி உறைகள், படையல் கிண்ணங்கள், மூடியுடன் கூடிய மாதுளைப் பெட்டி, அன்னத்தைப் போன்ற கிணற்றுச் சகடம், வேள்விக் கரண்டி போன்ற அன்னக் கரண்டி, நெசவுக் கருவிகள். யக்‌ஷர்கள், அனுமன் சிலைகள், ஈரத்தால் பாதிக்கப்படாத உறுதியான மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள், அரச குடும்பத்துக்கான பல்லக்குகள், புத்த பிக்குகள் அமரும் வேலைப்பாடு மிக்க சிறுபீடம், அந்தக் காலச் சமையல் பாத்திரங்கள் எல்லாம் இங்கே உள்ளன.

இந்தப் பகுதியில் உள்ள பொருட்களில் முக்கியமானது மறைந்த மன்னர் சிசோவத்தின் ஈமத் தாழி. செம்பால் செய்யப்பட்டு வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டது இது. சுமார் 3 மீட்டர் உயரமுள்ளது இந்தத் தாழி. நெடுக்குவாக்கில் நீட்டப்பட்ட குங்குமச் சிமிழ்போல் இருக்கிறது இது. ஊமத்தம் பூவுக்குக் குமிழ்மூடி போட்ட மாதிரியும் இருக்கிறது தாழி. இது எப்படிப் பயன்படும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், கம்போடிய, தாய்லந்து மன்னர்களின் ஈமச் சடங்கு நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்போடிய, தாய்லந்து மன்னர்கள் இறந்துபோனால், இந்தியப் பாரம்பரியத்தில் உள்ளதுபோல் ஒரு சில நாட்களில் உடனடியாகத் தகனம் செய்துவிட மாட்டார்கள்.

மன்னரின் இறுதிச் சடங்கு மாபெரும் விழாவைப் போல் நடத்தப்படும். அதற்குத் தயாராக ஓராண்டுவரை கூட பிடிக்கும். ஆகவே, பழங்காலத்தில் முதலில் மன்னரின் உடலைப் பதப்படுத்தி அதன் மேல் தங்க முகமூடியைப் பொருத்தி வைத்து விடுவார்கள். இப்போது தங்க முகமூடி பொருத்தும் வழக்கம் இல்லை. மன்னரின் உடலுக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருப்பார்கள்.

மன்னரின் உடலுக்கு அருகே எப்போதும் பிரார்த்தனை மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இது மூன்று மாதத்திலும் முடியலாம், 300 நாளிலும் முடியலாம். கம்போடியாவில் பொதுவாக 100 நாட்களில் இறுதிச் சடங்கு நடைபெறும்.

ஈமச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றதும், மன்னரின் உடலை உயரமான இந்தத் தாழிக்குள் கருவிலுள்ள சிசுவைப் போல் மடித்து வைப்பார்கள். மறுபிறவியைக் குறிக்கும் வகையில், தாயின் கர்ப்பத்தில் இருப்பதைப் போல் உடல் மடிக்கப்படுகிறது. உடல் நேரடியாகத் தாழிக்குள் வைக்கப்படாது. முதலில் அது ஒரு சிறிய தாழிக்குள் வைக்கப்பட்டுப் பின்னர் பெரிய தாழிக்குள் வைக்கப்படும். வேலைப்பாடு மிக்க தாழி உயரமான மூடியால் மூடப்பட்டு அலங்காரத் தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தகனத்துக்கு முந்திய நாள் அரண்மனை வளாகத்தில் வாண வேடிக்கை போடப்படும் என்று, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அதைப் பார்த்த பிரெஞ்சுக்காரர் ஹென்ரி மார்ஷல் எழுதுகிறார்.

அரச குடும்பத்தாருக்கான சுடலையில் மன்னரின் தகனத்துக்கென்றே அலங்காரக் கட்டடம் ஒன்று கட்டப்படும். அங்கு, மன்னரின் உடல் தாழியிலிருந்து எடுக்கப்பட்டுத் தகனம் செய்யப்படும். பிறகு மன்னரின் அஸ்தி சேகரிக்கப்பட்டு அது அரண்மனை வளாகத்திலுள்ள வெள்ளி மாடத்தில் நிரந்தர அஞ்சலிக்காக வைக்கப்படும். அஸ்தியில் ஒரு பகுதி, மன்னர்களின் விருப்பப்படி ஆற்றிலோ ஏரியிலோ கரைக்கப்படுவதும் உண்டு.

தாய்லந்தை சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னர் பூமிபோன் அதுல்யதே, சென்ற ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காலமானார். அவருக்கான இறுதிச் சடங்கு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்காகப் பல மில்லியன் டாலர் செலவில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மன்னரின் ஈமத் தாழியை ஏந்தி ஊர்வலமாகச் செல்லவிருக்கும் “மாபெரும் வெற்றி அரச அலங்காரத் தேர்” மட்டுமே பல நூறு பேரின் உழைப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 1795-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேர் அது.

ஈமத் தாழி வைக்கப்படும் அலங்காரத் தேரை, தேர்ந்தெடுக்கப்பட்ட  வீரர்கள் தகனச் சாலைக்கு இழுத்துச் செல்வார்கள். அப்படிப்பட்ட தாழிதான் புனோம்பென் அரும்பொருளகத்தில் உள்ளது. கம்போடிய மன்னர் நொரோடம் சுராம்ரிட் 1960இல் காலமானபோது அவரது நல்லுடலை இந்தத் தாழியில்தான் வைத்திருந்தார்களாம். அவரது தகனம் முடிந்தபிறகு அதே ஆண்டு தாழியை தேசிய அரும்பொருளகத்துக்கு எடுத்துவந்து காட்சிக்கு வைத்துவிட்டார்கள்.

 

இந்த வடபுறக் காட்சிக் கூடத்திற்கு அருகிலேயே வரலாற்றுக் காலத்துக்கு முந்திய அரும்பொருட்களின் காட்சிக் கூடமும் இருக்கிறது. இங்கே 2400 ஆண்டுப் பழமையான முரசுகள், மணி, அலங்காரத் தண்ணீர்க் குடுவை, வெண்கலக் கங்கணம் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து முடித்து அரும்பொருளகத்தை விட்டுப் புறப்படுமுன், அரும்பொருளகக் கையேடு ஒன்றை வாங்கிய ராஜூ அங்கேயே அதை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார். அந்தக் கையேடு இல்லையேல் கடைசி சில அத்தியாயங்களை இவ்வளவு விரிவாக எழுதியிருக்க முடியாது. நன்றி ராஜூ !

அரும்பொருளகத்திலிருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வந்ததும் நினைவுப் பொருட்கள் வாங்க அருகிலுள்ள கடைத் தொகுதிக்குச் சென்றோம். பேங்காக் நகரின் சத்துசாக் போன்ற இடம் இது. எங்கு திரும்பினாலும் சுட்ட இறைச்சியின் கெடுமணம் வருகிறது இங்கேயும். அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான கடைகள் ஒன்று சேர இருக்கும். விதவிதமான நினைவுப் பொருட்கள், துணிமணிகள் வாங்கலாம். ஒவ்வொரு பொருளையும் இரண்டு மூன்று கடைகளில் விலை விசாரித்த பிறகே வாங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின்மேல் ஒட்டிக் கொள்வது போன்ற பாயோன் கல்முகங்கள், அங்கோர் வாட் ஆலயம் ஆகியவற்றை நான் வாங்கிக் கொண்டேன்.

இரண்டு ஆள் மட்டுமே நடந்து செல்லக்கூடிய குறுகலான பாதையின் வழியே செல்லும்போதெல்லாம் எனக்கு அச்சமாக இருக்கும். இங்கே ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் என்னாகும்? அதற்கான எல்லாச் சாத்தியங்களும் அங்கே இருந்தன. எப்படி இவ்வளவு நெரிசலாகக் கடைகளைப் போட அனுமதிக்கிறார்கள்? ஏதாவது ஒரு நெருக்கடி என்றால் தப்பிக்கும் வழி எது என்று கூடப் பயணிகளுக்குத் தெரியாது. கடைக்காரர்கள் அங்கேயே புழங்குபவர்கள் என்பதால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதிகாரிகள் கவனிக்க வேண்டிய அக்கறைக்குரிய அம்சம் இது. சிங்கப்பூரில் இதுபோன்ற நெரிசலான கடைகளைப் பார்க்கவே முடியாது. சாத்தியமான எல்லாவித நெருக்கடிகளும் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்கு மாற்றுத் திட்டத்தை முன்வைத்தால்தான் அனுமதி கிடைக்கும். இதையெல்லாம் சொன்னால் பரணி என்னை முறைப்பார்.

அண்ணா அது சிங்கப்பூர். இது புனோம் பென் என்பார். சரிதான். நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பி எல்லாவற்றையும் அள்ளிப் பெட்டியில் திணித்துக் கொண்டு விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். சாப்பிட நேரமில்லை. நாலு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும்.

குளித்தால் தேவலாம் போல இருந்தது அனைவருக்கும். அரண்மனை வளாகத்தில் அடித்த வெயில் எல்லாம் எங்கள் தலையில்தான் காய்ந்தது. கசகசவென்று இருந்தாலும் குளிக்க நேரமில்லை. முக்கால் மணி நேரத்திற்குள் விமான நிலையத்தைச் சென்றடைந்தோம். ஓட்டுநர் ராவுக்கு விடைகொடுத்து உள்ளே சென்று கிடைத்ததைச் சாப்பிட்டுக் குடிநுழைவுப் பகுதிக்குச் சென்று முறைமைகளை முடித்துப் பயணிகள் காத்திருப்பு அறைக்குச் சென்று அக்கடா என்று உட்கார்ந்தோம்.

உடலில் அலுப்பு இருந்தாலும் அது ஆனந்தமாக இருந்தது. நெடுநாட்களாக நினைத்த ஒன்றை நல்லபடியாக நிறைவேற்றி முடித்துவிட்டோம் என்ற நிறைவு. அடுத்தமுறை குடும்பத்தோடு வரவேண்டுமெனப் பேசிக் கொண்டோம். நல்ல நண்பர்கள் அமைந்ததால், எந்தச் சங்கடமும் இன்றி இன்பமாகக் கழிந்தது பயணம். விமானத்தில் ஏறிக் கண்ணை மூடி, மறுபடியும் மழைநீர் வாசனை மிகுந்த அங்கோர் வாட்டுக்குள் நுழைந்தேன்!

பொன். மகாலிங்கம்

- தொடர் நிறைவுபெற்றது - 

 

 

பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment