உலகின் மிகப்பெரிய ஆலயம் - 16


கம்போடியக் கல்முகங்களை மிக நெருக்கத்தில் பார்ப்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். என்னுடைய வாழ்நாளில் இதுவரை சோழர்காலக் கோயில்களின் துவாரபாலகர்களைத்தான் பிரமாண்ட உருவில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அதுவும் அதிகபட்சம் இடுப்புவரை உள்ள பகுதிதான் நேர்பார்வைக்குத் தெரியும். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆலய துவாரபாலகர்கள் ஆஜானுபாகுவான ஆட்கள். அண்ணாந்து பார்க்கும்போது சிற்பத்தின் முழுமையான அழகைத் தரிசிப்பது சிரமம். ஆனால் பாயோன் ஆலயக் கல்முகத்தை மிக அருகில் பார்த்து அதைத் தொட்டுப் பார்க்க முடிகிறது. 

காலை முதல் அலைந்ததில் களைத்துப் போயிருந்தாலும், பாயோன் ஆலயத்தின் அழகு எங்களைக் கட்டிப் போட்டிருந்ததில் களைப்புத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். அங்கோர் வாட் போலில்லாமல் இங்கு பயணிகளின் கூட்டம் சற்றுக் குறைவுதான். அதனால் எங்கள் சத்தம்தான் பெருஞ்சத்தமாக இருந்தது.

மூன்றாம் தளத்தில் இருந்து பார்க்கும்போது சுற்றிலும் காடுதான் தெரிந்தது. வேறு நாகரிகக் கட்டுமானம் எதுவும் தெரியவில்லை. கோயிலைச் சுற்றிக் கடைகளும் ஏதுமில்லை. நம்ம ஊரில் புகழ்பெற்ற ஆலயங்களைச் சுற்றி வளைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கோயிலை ஆக்ரமிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

மதுரை புதுமண்டபத்தை நினைத்துப் பாருங்கள். அங்குள்ள சிற்பங்கள் படும்பாடு வரலாற்று ஆர்வலர்களைப் பொருமச் செய்யும். அதெப்படி ஒரு மாநிலத்திற்கே வரலாற்று உணர்வு மழுங்கிப் போயிருக்கும் ? அதெப்படி நம்முடைய மக்களுக்கு மட்டும் தமது மூதாதையர் செல்வங்களின் மேல் இப்படி ஓர் அலட்சியம் ?

ஒருவேளை தமிழகத்தில் எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் அதைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், கல்வெட்டுகளின் எண்ணிக்கை அதிகமோ ? எதுவுமே அளவுக்கு அதிகமாகக் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். நமக்கும் அப்படித்தானோ ? இல்லாவிட்டால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நாயக்கர் கால ஓவியங்கள் மீது வெள்ளையடிக்கப்படுவதைப் பார்த்து சும்மா இருந்திருப்போமா ?

ஆயிரமாண்டுப் பழமைமிக்க கற்கோபுரத்தின் மீது டிஸ்டெம்பர் சாயம் அடிப்பதைப் பார்த்தும் பதறாமல் அந்த இடத்தைக் கடக்க நம்மவர்களால் எப்படி முடிகிறது ? சிற்பங்களைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று மணல்வீச்சு முறையில் அவற்றை மொண்ணையாக்கி வருகிறோமே.. இதற்கெல்லாம் என்று விடிவுகாலம் ? இல்லை அப்படி ஒன்று பிறக்குமுன்னரே எல்லாச் செல்வங்களையும் பின்னப்படுத்தி முடித்திருப்போமா ? ஈஸ்வரோ ரக்‌ஷத் !...

இவ்வளவு அவநம்பிக்கைக்கு இடையிலும் சில விடிவெள்ளிகளைப் பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக்கில் இளையர்கள் சிலர் ஆலயச் சிலைகளைத் தேடிப் பிடித்துப் பெரியவர்கள் துணையோடு அதன் வரலாற்றை அறிந்து படத்தோடு பதிவிடுவதைப் பார்க்கும்போது மனத்துக்கு ஆறுதலாக இருக்கிறது. சசி தரன் என்ற இளையர் ஒருவர் ஒரு கல்வெட்டு ஆதாரம் தேடிக் கர்நாடகம் வரை சென்று வந்த அனுபவத்தை அண்மையில் படித்தேன். இவரைப் போன்ற இளையர்களைப் பார்க்கும்போது இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்தத் தோன்றுகிறது.

கம்போடிய வரலாறு பற்றி அங்குள்ள இளையர்கள் பெருமிதம் கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. உள்ளூர் மனிதர்களோடு நெருங்கிப் பழகினால்தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அது அவர்களின் வாழ்வாதாரம் என்பதால் அதைப் பேணுவதில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அனுமானிக்க முடிகிறது. அங்கோர் வாட் ஆலயம் ஒன்று மட்டுமே கம்போடியப் பொருளியலுக்கு மில்லியன் கணக்கான டாலர் வருமானத்தை ஈட்டித் தருகிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அங்கோர் வாட்டின் பங்கு 16 விழுக்காடு. ஆயத்த ஆடை விற்பனைத் துறைக்கு அடுத்தபடியாக, முக்கியமான பொருளியல் உந்துசக்தி சுற்றுலாத் துறைதான். 2006ஆம் ஆண்டில், சுற்றுலாத் துறை தந்த வருமானம், 1.59 பில்லியன் டாலர் என்கிறது விக்கிப்பீடியா. கம்போடியாவும் அங்கோர்வாட்டும் சொல்லும் பொருளும் போல் பிரிக்க முடியாதவை. ஆகவே, அதைப் பொல்லம்பொத்திப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கம்போடியா என்றுகூடச் சொல்லலாம்.

இப்போது அங்கோர் வாட்டின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது அந்நாட்டு அரசு. கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு உயர்வு. அது உள்ளூர்க்காரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நுழைவுக் கட்டண உயர்வுக்கு அஞ்சிப் பயணிகளின் வரத்து குறைந்துபோனால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களுக்கு. சுற்றுலா வழிகாட்டிகளும் இந்த உயர்வை ஆதரிக்கவில்லை. அரசாங்கம் வானத்தில் இருந்துகொண்டு முடிவு எடுக்கிறது. எங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்கின்றனர் வழிகாட்டிகள்.

அரசாங்கமோ, இது நியாயமான உயர்வுதான். யானை வாங்குவோருக்கு அங்குசம் வாங்கவா பணமில்லாமல் போய்விடும் என்கிறது அது. ஒரு நாள் அனுமதிக் கட்டணம் 2014-இல் நாங்கள் போகும்போது 20 அமெரிக்க டாலர். இப்போது அது 37 டாலர். ஒரு குடும்பமாகப் போகும்போது நிச்சயம் கையைக் கடிக்கும். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நுழைவுக் கட்டணம் மட்டும் இந்திய ரூபாயில் சுமார் 9000 வரும். பெருந்தொகைதான். ஒப்புநோக்க, இந்தியாவில் தாஜ் மகாலைப் பார்க்கவரும் வெளிநாட்டினரிடம் 1000 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களுக்கு 40 ரூபாய்தான்.

சில சுற்றுலாத் தலங்களில் குடும்பமாகப் போகும்போது அதற்கென ஒரு தொகுப்புச் சீட்டு இருக்கும். சற்று மலிவாக இருக்கும். அங்கோர் வாட்டில் அப்படிக் கிடையாது. தனித்தனிக் கட்டணம்தான். இருந்தாலும் அங்கோர் வாட்டைப் பார்க்கக் கொடுக்கலாம்தான் என்னைப் பொறுத்தவரை. இத்தனை சீராக அதைப் பராமரிக்கிறார்களே !.. அதற்கே தகும் அந்தக் கட்டணம்.

சரி பாயோனுக்கு வருவோம். கல்முகங்களுக்கு மேல் சில இடங்களில் செடி முளைத்திருக்கிறது. அப்பனே யாராவது அதைப் பிடுங்கிப் போடுங்கள் என்று சொல்லத் தோன்றியது. கம்போடியாவின் பல ஆலயங்களை இந்தச் செடிகள் வளர்ந்து ஊடுருவிப் பிளந்து வீழ்த்தியுள்ளன. பாயோனுக்கும் அந்த கதி வரக்கூடாது. மூன்றாம் தளம் மிகவும் நெருக்கமாக இருந்தது. சில ஆய்வாளர்கள் இது முதலில் திட்டமிடாத கட்டுமானமாக இருக்கலாம் என்கிறார்கள். 

இத்தனை பெரிய ஆலயத்தைத் திட்டமிட்ட தலைமைச் சிற்பி இந்த இடத்தை இவ்வளவு குறுகலாக வடிவமைக்கக் காரணங்கள் குறைவு என்பது அவர்களின் வாதம். பிற்காலத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது மூன்றாம் தளம் கட்டும்போது திடீரெனக் கட்டுமானத் திட்டம் மாற்றப்பட்டிருக்கலாம். மத்தியிலுள்ள வட்டக் கட்டுமானம் ஓர் ஒழுங்கற்றுக் காணப்படுகிறது. அதனைச் சுற்றிலும் நிலை வாசல்களோடு பலகணிகள். சிதைந்த முகங்கள். கற்களின் உட்கூடு பல இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. எந்தச் சாந்தும் கற்களை இணைக்கவில்லை. கற்கள் ஒன்றையொன்று சார்ந்து அடுக்கப்பட்டுள்ளன.

மேலே மேலே கற்களை அடுக்கும்போது அதிகரிக்கும் எடை காரணமாகக் கீழே உள்ள கட்டுமானம் மேலும் உறுதிபெறுகிறது. பெரும்பாலான கற்களின் உட்புறத்தில் அவற்றைத் தூக்குவதற்காகப் போடப்பட்ட துளைகள் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. கிழக்கு வாயிலில் இருந்து நெடுகப் பார்த்தால் அடுத்த முனைவரை தடையின்றித் தெரிகிறது. கருவறையில், ஒரு புத்தர் சிலையை இருத்தியுள்ளனர். அது தொடக்க காலத்தில் இருந்து உள்ள சிலையா அல்லது தற்காலிக ஸ்தாபிதமா தெரியவில்லை. அதற்கும் அசிங்கமான ஒரு ஜிகினாத் துணி.

சுற்றிலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கீழே மலர்ப் படையல். உண்டியலில் பலநாட்டு நாணயங்கள் கிடந்தன. கருவறையின் உச்சி திறந்து கிடக்கிறது. பெரிய பொந்துபோல் இருக்கும் அதன் வழியாகச் சூரிய ஒளி வருகிறது. திறந்து கிடப்பதால், மேலிருந்து பெய்த மழைநீர் ஒழுகிப் பக்கவாட்டுச் சுவர்களில் வழிந்த தடம் தெரிகிறது. இது திட்டமிட்டுக் கட்டப்பட்ட துவாரமா அல்லது காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்து ஏற்பட்ட துவாரமா என்று அனுமானிக்க முடியவில்லை.

அதிகமாக மழை பெய்யும் இடம் என்பதால், எல்லாமே நீரில் ஊறிப் போய் உள்ளன. அதற்கு இணையாக வெயிலும் கொளுத்துகிறது. அதனால்தான் இப்படி ஒரு பசுமை இந்த ஊரில். பாயோன் கல்முகங்களோடு நாங்கள் ஐவரும் விதவிதமாகப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கோயிலுக்கு உள்ளே வரும்போது எல்லாரும் சேர்ந்து வந்தோம். ஆனால், கருவறைக்கு அருகே வந்தபோது அவரவர்க்குப் பிடித்த அம்சங்களைப் பார்க்க நேரம் எடுத்துக் கொண்டதால் பிரிந்துவிட்டோம்.

ஒரு மணி நேரம்தான் ஓட்டுநர் எங்களுக்குக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்குள் பாயோனைப் பார்ப்பது இயலாத காரியம். இருந்தாலும் வேறு வழியில்லை. குடும்பத்தோடு மறுபடி வருவோம் என்று மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டு கோயிலை விட்டு வெளியேறத் தொடங்கினோம். மேற்குப்புற வாயில் வழியாக நானும் பரணியும் வெளியேறினோம். வழியில் ஒரு புத்தர் சிலை நடுநாயகமாக வைக்கப்பட்டு அதற்கும் எல்லாச் சடங்குகளும் செய்யப்பட்டிருந்தன.

சுற்றிலும் கற்கள். பாயோன் ஆலயம் முழுமையாக இருந்தபோது இந்தக் கற்கள் எங்கே இருந்தனவோ.. இன்று மொத்தமாக எடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் மழை பெரிதாகப் பிடித்துக் கொண்டது. நல்லவேளை இதுவரை எங்களை விட்டுவைத்ததே பெரிது. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கேமராவைக் கையால் மூடிக் காப்பாற்றியவாறு ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டோம்.

கனத்த மழைக்கு நடுவே கனவு போல் கரைந்து கொண்டிருந்தது பாயோன். விட்டு வரவே மனமில்லை. இதைப் படித்துவிட்டு கம்போடியா போகத் திட்டமிடுவோர் இந்தக் கோயிலுக்கும் போதுமான நேரம் ஒதுக்குங்கள். இதைப் பற்றி இன்னும் விரிவாகப் படித்துவிட்டுச் செல்லுங்கள். இணையத்தில் ஏராளமான தகவல்களும் ஆவணப் படங்களும் காணக் கிடைக்கின்றன.

பிள்ளைகளுக்கு இதை ஓர் ஒப்படைப்பாகக் கொடுத்துக் குறிப்பு எடுக்கச் சொல்லிப் போய்வந்தால் அவர்களும் இந்த இடங்களை ஆர்வமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பமாகப் போனால், எல்லாருக்கும் இந்த இடங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் தெரிந்திருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆர்வம் உள்ளவரை மற்றவர்கள் பார்க்க விடமாட்டார்கள். போலாம் போலாம் என்று பிள்ளைகள் நச்சரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பாயோனிலிருந்து புறப்பட்டு நகர்ப் பகுதிக்குள் சென்று இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். நல்ல அகலமான சாலைகள். பெரிதாகப் போக்குவரத்து இல்லை. கடைகள் எல்லாமே பயணிகளை இலக்காகக் கொண்டு இயங்குபவைபோல் தெரிந்தன. கலைப் பொருட்கள் விற்கும் சில கடைகளை எட்டிப் பார்த்தோம். அங்கேயே உட்கார்ந்து சில பொருட்களைச் செய்து கொண்டிருந்தார்கள் சில கலைஞர்கள்.

எல்லாம் ஆனை விலை. குதிரை விலை. எங்களால் கனமான பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாது. கைச் சுமை மட்டும்தான் விமானத்தில் பதிவு செய்திருந்தோம். அது ஏழு கிலோதான். ஆகவே, ஒன்றும் வாங்கவில்லை. சியாம் ரீப்பிலிருந்து தலைநகர் புனோம் பென் செல்ல வேண்டும். குறைந்தது ஏழு, எட்டு மணி நேரம் பிடிக்கும். மறுபடியும் அந்தக் கண்டான் முண்டான் சாலையில் செல்வதை நினைத்தாலே உடம்பு வலித்தது. என்ன செய்ய முடியும் ?

புறப்பட்டோம். வழியில் இரவு ஒன்பது, பத்து மணிவாக்கில் ஓர் ஊரில் சாப்பிட வண்டியை நிறுத்தினோம். இந்தக் கடைதான் நாங்கள் முதலில் வந்த அன்று மூடப்பட்டிருந்தது. அன்று 11 மணியாகிவிட்டதால் கடை மூடிவிட்டார்கள். இன்று நேரத்தோடு வந்ததால், தப்பித்தோம். உணவு பரவாயில்லை ரகம்தான். பிரட்டிய சோறும் முட்டை ஆம்லெட்டும் சாப்பிட்டுப் பசியாறினோம். வரும்போது இருந்த உற்சாகம், தெம்பு போகும்போது இல்லை அனைவருக்கும்.

வண்டியில் ஏறியதுமே கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. ஓட்டுநர் ராவுக்குத் துணையாக நவீன் மட்டும் முன்னிருக்கையில் அமர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார். நாங்கள் நால்வரும் பெரும்பாலான நேரம் அம்பேலாகி விட்டோம். பின்னிரவு மூன்று மணிவாக்கில் புனோம் பென் சென்று சேர்ந்தோம். ஒரு சாதாரணமான ஹோட்டலில் இரண்டு அறைகள் பதிவு செய்திருந்தார் ராஜூ. அறை சுமாராக இருந்தாலும் அன்பான உபசரிப்பு..

காலையில் எழுந்து கம்போடிய அரண்மனையும் தேசிய அரும்பொருளகமும் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பி அருகிலுள்ள சந்தையில் சில நினைவுப் பொருட்கள் வாங்குவதாகத் திட்டம். மாலை நான்கு மணிக்கு விமானத்தைப் பிடிக்கவேண்டும். காலையில் எவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அவ்வளவு கூடுதலான இடங்களைப் பார்க்கலாம். ஹோட்டலில் காலை உணவு கிடையாது. வெளியில்தான் சாப்பிட்டாக வேண்டும். அதில் எங்கள் பொன்னான நேரம் வீணாகப் போவது தெரியாமல் எல்லாரும் படுத்ததும் உறங்கிப் போனோம்..

- பொன். மகாலிங்கம்

 

 

பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com

 
 



Leave a Comment